God realisation is feasible only through your body. Hence take care of the body well. Do not abuse it. Do not waste it.
704. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
(ப. இ.) நம் உடம்பு திருவடியுணர்வு பெறுதற்பொருட்டே தரப்பட்டது. அவ் வுடம்பை மெய்யுணர்வு வழியில் பழக்கி அத் திருவடியுணர்வினைப் பெறுதல் வேண்டும். அதனை வீணே அழியவிட்டால் உயிர் பயனடையாது. அது பாற்கலத்தைப் பாலைப் பருகுவதன்முன் அழியவிடுவதை ஒக்கும். அவ் வுடம்பை வளர்க்கும் வழிவகை திருவைந்தெழுத்தெண்ணல். அதனை இடையறாது கணித்துக் கொண்டிருப்பதே உடம்பை வளர்க்கும் உபாயம். அதனாலேயே உயிர் வளர்ச்சியுண்டாம். உயிர்வளர்ச்சி - மெய்யுணர்வு. உபாயம் - வழிவகை. உடம்பார் உயிரார் அவற்றின் சிறப்புநோக்கி உயர்திணை வாய்பாட்டால் கூறப்பட்டன. இஃது அஃறிணை உயர்திணையில் வந்த திணைவழுவமைதி.
705. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
(ப. இ.) பாற்கலத்தைப் பால்நோக்கிப் பேணுவதுபோல் உடம்பினுள் சிவபெருமான் உயிர்க்குயிராய்க் கோவில் கொண்டருளினன் என்னும் உண்மையுணர்ந்து அதனை அவனுடைமை என்று பேணுகின்றேன். இவ் வுண்மையுணராதகாலத்து அதனை இழுக்குடையதென்று எண்ணினேன்.